Cricket Countdown....

Thursday, October 28, 2010

கொஞ்சம் தேநீர்... நிறைய கோபம்...

2 நாளுக்கு முன்னாடி
எனக்கும் என் மனைவிக்கும்
பயங்கர சண்டை...
(@ ரமெஷ், அடிவாங்குனது நீதானனு கமெண்ட் போட கூடாது)

நான் வீட்டுல
வேலையே செய்யறது இல்லைனு
ஓவர் கம்ப்ளைண்ட்...

நானும் பதிலுக்கு
அவங்க சமைக்கறது தவிர
எதையும் செய்யலைனு
ஆர்கியூமெண்ட்...
(எதிர்த்து பேசினேங்க, அட நம்புங்க)

உடனே அவங்க
என்னை ஒரு டீயாவது
போடத்தெரியுமானு கேட்டுட்டாங்க...

எனக்கு ரோஷம் வந்துடுச்சு
(அட, இதையும் நம்புங்கப்பா)

போடுறேன் நானும்
டீ போடுறேன்...


உங்களுக்கும் கத்து
தரேன்.....
நீங்களும் பார்த்து
கேட்டு கத்துக்கோங்க

நேரா சமையலறைக்கு
போனேன்....
டீ போட First
சுடுதண்ணி வேணும்...
(என்னா கண்டுபிடிப்பு!)

தண்ணிய Electric Kettleல
பிடிச்சி கெட்டில் “ON”
செய்யுங்க

அடுத்து, அது சூடாகி
“OFF” ஆகிறவரை
“REST”

அடுத்த ஸ்டெப்,
அந்த தண்ணிய ஒரு
CUPல ஊத்துங்க

இப்போ அந்த
CUP சுடுதண்ணீல
சக்கரைய போட்டு
கலக்குங்க....

அடுத்து, நம்ம
SECRET BOXல
இருக்குற அதை
எடுத்து CUP சக்கரை
தண்ணில போட்டுங்க

டீ ரெடி!

ஓ! அது என்னவா?

இதுதான்,


டீ போடதான
சொன்னாங்க
பிளாக் டீ போட கூடாதுனு
சொல்லலையே!

டீ போட்டதோட ரிசல்ட் தெரியனுமா? பதிவு தலைப்பை மறுபடி படிச்சிக்கோங்க...

Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....


Friday, October 22, 2010

விசித்திர மரணங்கள்...2

மரணம் - மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. சில சமயங்களில் அது வரும் வழியே விசித்திரமாக இருக்கும். அதிக தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட மரணத்தை பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். இதோ, அதன் தொடர்ச்சியில் அடுத்த விசித்திர மரணம்...

24 மார்ச், 1975. 50 வயதான இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் மிட்சல் தன்னுடைய விருப்பமான காமெடி நிகழ்ச்சியான “The Goddies” பார்த்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு பிடித்த ஒன்று. தவறவிடுவதில்லை. அதில் வரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வாய்விட்டு சிரிப்பார்.


அன்றும் அப்படிதான் ஆரம்பித்தது. தொடர்ந்து 10 நிமிடம் நிகழ்ச்சி நகைச்சுவையாக சென்று கொண்டு இருக்க, இவர் தொடர்ந்து சிரித்து கொண்டு இருந்தார். இவர் தொல்லைதாளாத இவர் மனைவி எச்சரித்தும் சிரிப்பது நிற்கவில்லை. இப்படி தொடர்ந்து 25 நிமிடங்கள் சிரித்த இவர், அமர்ந்து இருந்த சோபாவில் இருந்து சுருண்டுவிழுந்து இறந்தார்.

மரணத்திற்கான மருத்துவ காரணம்:

  1. தொடர்ந்து சிரித்தால், சுவாசம் குறைந்து மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது
  2. மேலும்,  இதய துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
  3. இதனால் இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை குறைகிறது.
  4. ஆக்சிஜன் குறைந்ததால் இதய தசைகள் செயல் இழக்கின்றன.
  5. இதன் காரணமாக “Heart Attack” அல்லது “Heart Failure” ஏற்பட்டும்.
  6. இதன் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.

    இந்த சம்பவத்திற்கு தொடர்பான சில சுவாரசிய தகவல்கள்:

    1. இவர் தொடர்ந்து சிரித்த THE GODDIES நிகழ்ச்சியின் பாகத்தின் பெயர் “ Kung Fu Kapers ”
    2. அலெக்ஸ்ன் மனைவி, அவர் இறந்த பின்னர் THE GOODIES நிகழ்ச்சிக்கு அனுப்பிய கடிதத்தில் அலெக்ஸ்ன் இறுதி நிமிடங்களை மகிழ்ச்சியாக வைத்ததற்கு நன்றி கூறி இருக்கிறார்
    அதிகமாக சிரிப்பதும் ஆபத்துதான்....

    Monday, October 18, 2010

    மம்மி... நான் ஸ்கூலுக்கு போறேன்....

    பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர்களை குளிப்பாட்டி, ரெடி செய்து, சாப்பிட வைத்து, புத்தகங்களை சரிபார்த்து பள்ளி பேருந்துக்கோ அல்லது பள்ளி வாசலிலோ அவர்களை விடும்வரை ஓட வேண்டும்.

    ஒருகட்டத்தில் இது சுகமானதாய் மாறி, பலர் விருப்பத்துடன் ஓடுவதும் உண்டு. ஆனால், முதல் முதல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் கவலை வேறு விதம்.....

    இத்தனை நாள் தன் பார்வையிலேயே வளர்ந்த பிள்ளை சில மணி நேரங்கள் தன்னை பிரிந்து இருக்குமா?

    அங்கு மற்ற குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் நன்றாக பழகுமா?

    தன்னை காணாமல் தவிக்குமா?

    அடம் செய்து பிடிவாதம் செய்யுமா?

    மற்ற குழந்தைகளிடம் அடிவாங்கி அழாமல் பார்த்துகொள்வார்களா?

    அடம் செய்வதால் ஆசிரியர்கள் குழந்தை மேல் கோபப்படுவார்களா?

    இப்படி பல கேள்விகள் எழும்....

    குழந்தை அழுமா என நினைத்து அழும் பெற்றோர்கள் பலர்... 

    ஆனால், அந்த குழந்தை முதுகில் சிறிய பையை மாட்டி கொண்டும், சட்டையில் ஒரு கர்சிப் குத்திக்கொண்டும், ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை மாட்டி கொண்டும் பெற்றோருக்கு முத்தம் தந்து டாட்டா காட்டி பள்ளிக்கு செல்லும் அழகை பார்க்க, இரு கண்கள் போதாது.

    ஆம்,

    என் மகள் ஷம்ஹித்தா இன்று முதல் பள்ளிக்கு போகிறாள்! நாங்கள் இன்று முதல் எங்கள் ஓட்டத்தை ஆரம்பிக்கிறோம்.... என்ன தான் 3 மணி நேரமே என்றாலும், PlaySchool தான் என்றாலும் மனதில் ஒரு வித பயமா தயக்கமா சந்தோசமா  என என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு உருண்டு கொண்டு இருக்கிறது. பார்போம்.... எப்படி சமாளிக்கிறாள் என்று

    ஆனால், காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட....



    மம்மி டாட்டா... நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்....


    Thursday, October 14, 2010

    தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 2

    தமிழ் படங்களை கண்டுபிடியுங்கள் என்ற எனது முந்தைய இடுகைக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றி. 

    உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இதோ அடுத்த புதிர் கேள்விகள் சாரி படங்கள். சற்று கடினமாக (?!?!) வேண்டும் என பலர் கேட்டதால்  இந்த முறை சற்று கடினமாகவே தந்துள்ளேன்.

    விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம்.

    தமிழ்படங்களை கண்டு பிடியுங்கள் முதல் பாகத்திற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.


    உதாரணம்:

    விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

    விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

    1.

    2.


    3.


    4.


    5.


    6.


    7.


    8.


    9.


    10.



    விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

    டிஸ்கி: சில படங்களுக்கு அனிமேஷன் + டச் அப் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.


    Monday, October 11, 2010

    பரிவர்தன் - ஒரு மாற்றம்

    மதிய உணவு இடைவேளையில் 8 பெண்கள் சேர்ந்தால் அங்கு வெட்டி பேச்சுக்களும், கிண்டல்களும் தான் இருக்கும். அன்றும் அந்த அலுவலகத்தில் அப்படித்தான் இருந்தது. அவர்கள் பேச்சு Times of India நடத்திய TEACH INDIA வை பற்றி திரும்ப, ஒவ்வொருவரும்  தங்கள் சிரமங்களையும், அதில் பங்கேற்க முடியாத வருத்தங்களையும் தெரிவித்தனர்.

    அப்பொழுது தான் ஒரு சிறு தீப்பொறி உருவானது. “ஏன், நாம் ஒரு குழுவாக இயலாதவர்களுக்கு உதவ கூடாது?”. இந்த சிறுதீப்பொறியை அணையாமல் பெரியதாக்கும் முயற்சியில் விரைவாக செயலில் இறங்கினர்.முதலில் AID INDIA ( இது TEACH INDIA விற்கு உதவும் ஒரு NGO அமைப்பு ) விற்கு தங்கள் தொழில் சம்பந்தமான கல்வி பொருட்களையும், கற்பிக்கும் சாதனங்களையும் வழங்கினர். இவர்கள் வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டே கணிதம் சொல்லித்தரும் பணியை செய்கின்றனர். அதனால், கணித்தை எவ்வாறு எளிமையாய் புரிய வைப்பது, எவ்வாறு படங்கள் கொண்டு விளக்குவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை. இந்த உதவியை தொடர்ந்து வழங்கி கொண்டு இருந்த போது ஒரு தேக்கம் வந்தது.


    சரி, வேறு வழியில் உதவலாம் என இவர்கள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், ஏழை சிறுவர்களுக்கு படிக்க உதவி என பட்டியல் நீண்டது.

    இதன் காரணமாக மேலும் சக ஆண் ஊழியர்கள் 3 பேர் உட்பட சிலர் சேர எண்ணிக்கை 15 ஐ தொட்டது

    15 பேரை வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்ற இவர்களின் கேள்விக்கு எதையும் சாதிக்கலாம் என இவர்கள் அலுவலகம் மூலம் பதில் வந்தது. உருவாக்கினர் ஒரு குழுவை, “பரிவர்தன்” என பெயரும் வைத்தனர். எவ்வளவு பொருத்தமான் பெயர் “பரிவர்தன்” ( परिवर्तन ) என்றால் “மாற்றம்” என்ற பொருள்.

    எல்லாம் சரி, துவக்கம் ஓஹோ என இருக்க வேண்டாமா? அடித்தனர் முதல் பந்திலேயே சிக்சர். “THE BANYAN" அமைப்பை தொடர்பு கொண்டனர். இந்த அமைப்பு சென்னையில் மனநலம் குன்றியவர்களை பாதுகாத்துவருகிறது. BANYAN மூலம் மனநலம் குன்றியவர்கள் உருவாக்கிய வாழ்த்து அட்டைகள், கலை பொருட்கள் போன்றவற்றை ஒரு கண்காட்சியாக தங்கள் அலுவலகம் இருக்கும் 4 அடுக்கு மாடி கட்டிட வரவேற்பறையில் வைத்தனர்


    ஆச்சர்யபடும் விதமாக, அனைத்து பொருட்களும் பகல் 2 மணிக்குள்ளேயே விற்று தீர்ந்தது. இவர்கள் முயற்சிக்கு அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகங்களும் ஆதரவுதந்து வெற்றிக்கு உதவினர். அடுத்து அடுத்து இவர்கள் பல அனாதை விடுதிகளுக்கு உணவு வழங்குதல், படிக்க உதவி வேண்டுவோருக்கு உதவி செய்தல் என பல செயல்களை செய்து வருகின்றனர்.

    வருடம்தோறும் அலுவலகம் சார்பாக கொண்டாடும் சில நிகழ்ச்சிகளை தவிர்த்து அந்த பணத்தில் பிறருக்கு உதவுகின்றனர். இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் செய்வது தானே என சிந்திக்கிறீர்களா? 

    இது சிறு தீப்பொறிக்கு கிடைத்த வெற்றி!
    10 பெண்களின் முயற்சியில் விளைந்த மாற்றம்!!

    வாய் சொல்லில் வீரர்கள் இருக்கும் நாட்டில்,
    செயலில் இறங்கி சத்தம் இல்லாமல் 
    சாதித்து கொண்டு இருக்கும் இவர்கள்,
    நம்மை எதுவும் கேட்கவும் இல்லை!
    நம் உதவியை எதிர்பார்க்கவும் இல்லை!!

    இந்த உதவிகளை இவர்கள் தங்கள் மனத்திருப்திக்காக மட்டுமே செய்துவருகிறார்கள்.

    இவர்களின் இத்தகைய முயற்சிக்கு தேவை சில பாராட்டுகளும், சில உற்சாக வார்த்தைகளும்தான். அதை தருவோமே அவர்களுக்கு!

    பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என உணர்த்தியுள்ள இந்த மகளிர் அமைப்புக்கு நான்  அளிப்பது

    ஒரு ராயல் சல்யூட்...

    நீங்கள்?

    Thursday, October 7, 2010

    தேவா பிறந்தநாள்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்


    அவர் பிறந்த நாளை முன்னிட்டு கழக கண்மணிகளுக்கு அவர் கவிதை மற்றும் கட்டுரைகளை படித்து புரிந்து கொல்ல சிறப்பு பரிசு இதோ....

    எல்லோரும் சண்டை போடாமல் எடுத்துக்கோங்க.....



    அவருக்காக ஒரு சிறப்பு பாடல்....

    எந்திரன்: அரிமா அரிமா-நானோ
    ஆயிரம் அரிமா-உன்போல்
    பொன்மான் கிடைத்தால்- யம்மா
    சும்மா விடுமா?

    ராஜாத்தி என் நெஞ்சில் ஆசைத்தீ
    நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
    அக்கினி அணையலையே!

     உன்-
    பச்சைத்தேனை ஊற்று
    என்-
    இச்சை தீயை ஆற்று

    என் செல்லச் சிலையே பந்தி நடத்து
    சேலை இலை போட்டு

    Wednesday, October 6, 2010

    9 ஸ்லிப்புகள் - கிரிக்கெட்


    கிரிக்கெட்டில் ஸ்லிப்பில் அதிக பட்சமாக 4 பேர் நின்று பார்த்திருப்போம். ஆனால், இந்த இரண்டு படங்களையும் பாருங்கள். பேட்ஸ்மேனுக்கு பின்னால் கீப்பரையும் சேர்த்து மொத்தம் 10 பேர். என்ன இரண்டுமே இந்த ஆஸ்திரேலியா ஆளுங்க செஞ்ச அட்டகாசம்தான். ஒரு காலத்துல ஆதிக்கம் செலுத்தினப்போ இப்படி ஆட்டம் போட்டு இருக்காங்க.

    1. Aus Vs Zim, 1999.

    ஸ்டீவ் வாக் தலைமை யில் இந்த கூத்து நடந்தது.



    2. Aus vs NZ:

    இந்த கூத்தை செய்தவர் பெளலர் டெனிஸ் லில்லி. தான் எழுதும் புத்தகத்தில் இப்படி ஒரு பிரத்தியேக படம் வர வேண்டும் என்று இப்படி செய்ததாக கேள்வி.


    ஆனால், இரண்டுமே அரிய புகைப்படங்கள் தான்

    ஜாம்பவான்கள் இருந்த ஆஸ்திரேலிய அணியின் இன்றைய நிலை?!


    Monday, October 4, 2010

    எந்திரன் - படத்துக்கு டிக்கெட் வேணுமா?

    தமிழ் படங்களே ரிலீஸ் ஆகாத மொரீசியஸ்-ல் தலைவர் படம் எந்திரன் ரிலீஸ் ஆகிறது, நான் சனிக்கிழமை பார்க்க போகிறேன் என்று சென்ற பதிவில் எழுதி இருந்தேன்.  சொன்னபடியே, சனிக்கிழமை 1 மணி ஷோக்கு கிளம்பியாச்சு. இங்கு அட்வான்ஸ் புக்கிங் கிடையாது என்பதாலும், மொத்த நாட்டிலேயே ஒரே ஒரு தியேட்டரில்தான் படம் ரிலீஸ் என்பதாலும் நண்பர்களை முடிந்தால் சீக்கிரம் சென்று டிக்கெட் எடுக்க சொன்னேன்.

    வழக்கம் போல அவர்கள் சொதப்பினர். நான் அவசர அவசரமாக 12.45 க்கு அங்கு போய் சேர்ந்தேன். அங்கு சென்றால்,

    தியேட்டருக்கு வெளியே பயங்கர கூட்டம்
    டிக்கெட் வாங்க பெரிய கியூ
    உள்ளே உட்கார இடம் இல்லாமல் தியேட்டர் Full
    வசனம் கேட்க முடியாதபடி விசில் சத்தம்

    இதெல்லாம் இருக்கும்னு தாங்க நானும் நினைச்சேன். ப்ச், அப்படி ஒன்னும் இல்லை. தியேட்டர் காலி. நான் வாங்கிய 3 டிக்கெட்டுக்கே எனக்கு ராஜமரியாதை. ஆமாங்க, டிக்கெட் வாங்கினவுடனே என்னை தியேட்டருக்கு உள்ளே உட்கார சொல்லி விட்டனர். (2 நண்பர்களும் இன்னும் வந்து சேரவில்லை). அதனால் கடைசி 15 நிமிடம் படத்தை முதலிலேயே பார்த்துவிட்டேன். ;)
    எவ்வளோ கூட்டம்!
    நீண்ட வரிசை!
    1 மணிக்கு ஷோ அதுவரை நண்பர்கள் வரவில்லை. நான் வெளியில் அவர்களுக்காக காத்து இருக்க, ஆப்பரேட்டரும் எனக்காக 10 நிமிடம் காத்திருந்துவிட்டு படத்தை ஆரம்பித்தார், தியேட்டருக்கு வந்த மொத்தம்  30 பேருக்காக. 5 நிமிடத்தில் நண்பர்கள் வந்து சேர்ந்தனர். 

    விசிலும், தலைவா! என அழைக்கும் ரசிகர்களும், காட்சிக்கு காட்சி வரும் கைத்தட்டல்களும் இல்லாத ரஜினி படம் - பார்க்க பிடிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடே பார்க்க விரும்பும் எந்திரன் படத்தை ரிலிஸ் ஆன மறுநாளே பார்த்தது மட்டும் சந்தோஷம். இந்தியா வரும் போது கண்டிப்பாய் மறுபடி பார்க்கனும், அட்லீஸ்ட், ரசிகர்கள் கைத்தட்டல் கேட்கவும், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ்காகவும்.
    படம் மொரிசியஸ்ல் ரிலிஸ் செய்யபட்டதை சரியாக விளம்பரபடுத்தாதும், தமிழர்களை விட அதிக அளவில்  “ஹிந்தி”யர்கள் இருப்பதும் இந்த மந்தமான ரிலிஸ்க்கு காரணமாக இருக்கலாம். தமிழ் மொழி,  மொரிசியஸ்-ல் ஒரு ஆட்சி மொழி என்பது குறிப்பிடதக்கது.

    சரி யாருக்காவது எந்திரன் பட டிக்கெட் வேணுமா? இங்க வாங்க. என்ன படத்தின் டிக்கெட் விலை 150 ரூபாய், ஆனால், விமான டிக்கெட் விலை 30,000 ரூபாய்! வர்றீங்களா? படத்துக்கு டிக்கெட் வேணும்னா நான் ஸ்பான்சர் பண்ணுறேங்க... நோ பிராப்ளம்.

    படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம

    DOT (இது படம் பார்த்தவங்களுக்கு புரியும்)