Cricket Countdown....

Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Thursday, April 7, 2011

ஊழலுக்கு எதிரான முதல் அடி - அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே. 

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.


யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே.....

facebook மூலம் ஆதரவு தர இங்கே சொடுக்குங்கள்

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பவர்கள் கிழே தமிழ்மணத்தில் +ve ஓட்டு போட்டு இந்த பதிவு பலரை சென்று அடைய உதவுங்கள் (இது ஹிட்ஸ் வேண்டி அல்ல, இந்த பதிவு பலரை சென்று அடைய மட்டுமே)


Wednesday, November 10, 2010

பூமியை பாதுகாப்போம்....

உங்களிடம் நல்ல முறையில் ஓடும் பழைய வாட்ச்கள் உள்ளதா?

படித்து முடித்த பல புத்தகங்கள் தூக்கிபோட மனமின்றி பரணை நிரப்புகிறதா?

பழைய மிக்ஸி, எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகி ஆனால் ரிப்பேர் செய்யும் வழி இருந்து செய்யாமல் விட்டது வீட்டில் சேர்ந்து இருக்கிறதா?


இப்படி பல உபயோகித்த பொருட்கள், தூக்கி எறிய மனது வராத பொருட்கள், பிறருக்கு உதவும் என நீங்கள் நினைக்கும் பொருட்கள் போன்றவற்றை தேவைபடுபவர்களுக்கு கொண்டு சேர்க்க ஒரு தளம் உள்ளது.

http://www.freecycle.org/

இது முழுதும் வியாபார நோக்கிலாமல் செயல்படும் ஒரு அமைப்பு. இவர்கள் நோக்கம் பூமியில் தேவையில்லாமல் தேங்கும் உபயோகமுள்ள பொருட்களை மறுசுழற்சியாக மற்றவர்கள் உபயோகிக்க உதவுவதுதான். 

ஏறக்குறைய உலகம் முழுதும் 7 மில்லியன் மக்கள் இந்த அமைப்பில் இணைந்து உள்ளனர். இவர்கள் செயல்படும் விதம் ரொம்ப சிம்பிள். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருநகரங்கள் வாரியாக பிரிவுகள் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கு ஒரு குரூப் மெயில் வைத்து உள்ளனர். இதில் அவர்கள் தாங்கள் கொடுக்க விரும்பும் அல்லது பெற விரும்பும் பொருளின் Detailsஐ தங்கள் முகவரிஅனுப்புவர். தேவைபடுவோர்  அவர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்.


இந்த அமைப்பு தமிழ்நாட்டில் சென்னையிலும் கோவையிலும் உள்ளது.  கோவையில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை என்றாலும், சென்னையில் 450+ உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. இதில் உறுப்பினர் ஆவதால் அவர்கள் தரும் பொருளை நீங்கள் வாங்கிதான் ஆக வேண்டும் என்றோ, இல்லை, நீங்க குறிப்பிட்டவருக்கு தான் பொருள் தர வேண்டும் என்றோ அவசியம் இல்லை. இது முற்றிலும் உங்கள் சுய விருப்பத்தை பொருத்ததே....

இதில் உறுப்பினராக ஆகித்தான் பார்ப்போமே... யாருக்கு தெரியும் நீங்கள் வெகு நாட்களாக தேடி கொண்டு இருக்கும் ஒரு புத்தகமோ, பொருளோ உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கலாம்...

வீணாக்குவதை தவிர்ப்போம்....
பூமியை பாதுகாப்போம்...


Monday, October 11, 2010

பரிவர்தன் - ஒரு மாற்றம்

மதிய உணவு இடைவேளையில் 8 பெண்கள் சேர்ந்தால் அங்கு வெட்டி பேச்சுக்களும், கிண்டல்களும் தான் இருக்கும். அன்றும் அந்த அலுவலகத்தில் அப்படித்தான் இருந்தது. அவர்கள் பேச்சு Times of India நடத்திய TEACH INDIA வை பற்றி திரும்ப, ஒவ்வொருவரும்  தங்கள் சிரமங்களையும், அதில் பங்கேற்க முடியாத வருத்தங்களையும் தெரிவித்தனர்.

அப்பொழுது தான் ஒரு சிறு தீப்பொறி உருவானது. “ஏன், நாம் ஒரு குழுவாக இயலாதவர்களுக்கு உதவ கூடாது?”. இந்த சிறுதீப்பொறியை அணையாமல் பெரியதாக்கும் முயற்சியில் விரைவாக செயலில் இறங்கினர்.முதலில் AID INDIA ( இது TEACH INDIA விற்கு உதவும் ஒரு NGO அமைப்பு ) விற்கு தங்கள் தொழில் சம்பந்தமான கல்வி பொருட்களையும், கற்பிக்கும் சாதனங்களையும் வழங்கினர். இவர்கள் வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டே கணிதம் சொல்லித்தரும் பணியை செய்கின்றனர். அதனால், கணித்தை எவ்வாறு எளிமையாய் புரிய வைப்பது, எவ்வாறு படங்கள் கொண்டு விளக்குவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை. இந்த உதவியை தொடர்ந்து வழங்கி கொண்டு இருந்த போது ஒரு தேக்கம் வந்தது.


சரி, வேறு வழியில் உதவலாம் என இவர்கள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், ஏழை சிறுவர்களுக்கு படிக்க உதவி என பட்டியல் நீண்டது.

இதன் காரணமாக மேலும் சக ஆண் ஊழியர்கள் 3 பேர் உட்பட சிலர் சேர எண்ணிக்கை 15 ஐ தொட்டது

15 பேரை வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்ற இவர்களின் கேள்விக்கு எதையும் சாதிக்கலாம் என இவர்கள் அலுவலகம் மூலம் பதில் வந்தது. உருவாக்கினர் ஒரு குழுவை, “பரிவர்தன்” என பெயரும் வைத்தனர். எவ்வளவு பொருத்தமான் பெயர் “பரிவர்தன்” ( परिवर्तन ) என்றால் “மாற்றம்” என்ற பொருள்.

எல்லாம் சரி, துவக்கம் ஓஹோ என இருக்க வேண்டாமா? அடித்தனர் முதல் பந்திலேயே சிக்சர். “THE BANYAN" அமைப்பை தொடர்பு கொண்டனர். இந்த அமைப்பு சென்னையில் மனநலம் குன்றியவர்களை பாதுகாத்துவருகிறது. BANYAN மூலம் மனநலம் குன்றியவர்கள் உருவாக்கிய வாழ்த்து அட்டைகள், கலை பொருட்கள் போன்றவற்றை ஒரு கண்காட்சியாக தங்கள் அலுவலகம் இருக்கும் 4 அடுக்கு மாடி கட்டிட வரவேற்பறையில் வைத்தனர்


ஆச்சர்யபடும் விதமாக, அனைத்து பொருட்களும் பகல் 2 மணிக்குள்ளேயே விற்று தீர்ந்தது. இவர்கள் முயற்சிக்கு அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகங்களும் ஆதரவுதந்து வெற்றிக்கு உதவினர். அடுத்து அடுத்து இவர்கள் பல அனாதை விடுதிகளுக்கு உணவு வழங்குதல், படிக்க உதவி வேண்டுவோருக்கு உதவி செய்தல் என பல செயல்களை செய்து வருகின்றனர்.

வருடம்தோறும் அலுவலகம் சார்பாக கொண்டாடும் சில நிகழ்ச்சிகளை தவிர்த்து அந்த பணத்தில் பிறருக்கு உதவுகின்றனர். இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் செய்வது தானே என சிந்திக்கிறீர்களா? 

இது சிறு தீப்பொறிக்கு கிடைத்த வெற்றி!
10 பெண்களின் முயற்சியில் விளைந்த மாற்றம்!!

வாய் சொல்லில் வீரர்கள் இருக்கும் நாட்டில்,
செயலில் இறங்கி சத்தம் இல்லாமல் 
சாதித்து கொண்டு இருக்கும் இவர்கள்,
நம்மை எதுவும் கேட்கவும் இல்லை!
நம் உதவியை எதிர்பார்க்கவும் இல்லை!!

இந்த உதவிகளை இவர்கள் தங்கள் மனத்திருப்திக்காக மட்டுமே செய்துவருகிறார்கள்.

இவர்களின் இத்தகைய முயற்சிக்கு தேவை சில பாராட்டுகளும், சில உற்சாக வார்த்தைகளும்தான். அதை தருவோமே அவர்களுக்கு!

பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என உணர்த்தியுள்ள இந்த மகளிர் அமைப்புக்கு நான்  அளிப்பது

ஒரு ராயல் சல்யூட்...

நீங்கள்?

Friday, September 10, 2010

தடம் மாறும் பண்டிகைகள்...

விநாயக சதுர்த்தி - எனக்கு பிடித்த பண்டிகைகளில் முதலாவது இடத்தை பிடிக்கும் பண்டிகை. சிறு வயது முதலே முழுமுதற்கடவுள் விநாயகன் மீது ஒரு வித தனி ஈடுபாடு. அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா என இன்று வரை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. என் 3 வயதில் ஒரு பிள்ளையார் பொம்மையை தலையில் வைத்து கொண்டு வீடு முழுவதும் சாமி வருது சாமி வருது என்று சுற்று வேணாம், என் அம்மா சொல்வார்கள் (அதை போட்டு உடைத்ததும் நான்தான் என்றும் சொன்னார்கள்). 


பள்ளி பருவத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகர் செய்யும் இடத்தில் அமர்ந்து அவர்கள் செய்வதை வெகு நேரம் வேடிக்கை பார்த்து, பின் அவர்களிடம் சிறிது களிமண் வாங்கி வந்து நானும் பிள்ளையார் செய்கிறேன் என்று ஒரு வித உருவத்தை செய்து (பிள்ளையார் பிடிக்க குரங்கு) அதையும் அடம் பிடித்து வீட்டு பிள்ளையாருடன் வைப்பதும், அந்த பிள்ளையார் கண்களை சேகரித்து வைப்பதும் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.

வாலிபத்தில் விநாயகசதுர்த்திக்காக இளைஞர் நற்பணி மன்றத்தை கூட்டி நன்கொடை வசூலித்து பெரிய விநாயகர் சிலை வைப்பதும், அதற்கு இரண்டு பேர் DUTY போட்டு இரவில் காவல் இருப்பதும், ஐந்தாம் நாள் ஆட்டம் பாட்டத்துடன் அதை குளத்தில் கரைப்பதும் - அனுபவித்தால் தான் தெரியும் அந்த குதூகலம்.


ஆனால் இன்று யோசிக்கும் போது, நம் குழந்தைகள் இதை எல்லாம் அனுபவிக்கிறார்களா? பணத்திற்காக நாடு தாண்டியும், நகரத்திற்கு இடம் மாறியும் இருக்கும் நாம் இதை ஒரு கதையாக சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டோம். நம் குழந்தைகள்,  இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்?

இன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.

களிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.

சுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்?


இனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு.

அடுத்து, மனிதர்களை காக்க கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற காலம் போய் இப்பொழுது கடவுள் சிலைகளை காக்க போலிஸ் காவல் வைக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.


அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.


அனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இது என் 50வது பதிவு

Tuesday, August 31, 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில்....


“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்”


ஏ பாரதியே!
நீ சொல்லிவிட்டு போய்விட்டாய்! 
இங்கு வந்து பார்
செத்து மடியும் எம்மக்களை!
என் செய்வோம் யாம்
எதற்கும் உதவா மானிட பதர்கள் நாங்கள்!!


பசி - இந்த ஒரு வார்த்தையை மனதில் இருந்து உச்சரித்து பாருங்கள், 

என்ன காட்சி உங்கள் கண்முன் விரிகிறது?

பாலுக்காக அழும் குழந்தை, 
பாலில்லாமல் தவிக்கும் தாய்,
எலும்பாய் தெரியும் ஏழை நாட்டு குழந்தைகள், 
எலிக்கறி சாப்பிடும் விவசாயி, 
கஞ்சித்தொட்டியில் காத்திருக்கும் நெசவாளி.


வாழ்க்கையின் பாதையில் இப்படி பல சம்பவங்களை அனுபவித்திருக்கலாம், குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கலாம். 

ஐநா சபையின் கணக்குபடி 10 நொடிகளுக்கு (Seconds) ஒரு குழந்தை பசியால் இறக்கிறது. 

யார் காரணம்?  “விதி” என ஒரு வார்த்தை சொல்லி ஒதுங்கி போக முடியாது.

அரசாங்கமா? இயற்கையா? எதிரி நாடா? கடவுளா? யாரை குறை கூறி தப்பிக்கலாம்.

ஒரே ஒரு முறை உங்களை ஒரு கேள்வி கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும் நான் மற்றவர்கள் பசி போக்க என்ன செய்தேன்?

அனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருகிறேன், உதவுகிறன் என்று சொல்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

செல்ல நேரம் இல்லை, பணவசதி இல்லை, ஆனால் தினமும் உதவ மனம் உண்டு என விரும்புபவர்களுக்கு நான் வழிகாட்ட நினைக்கிறேன். உங்கள் ஒரு  சொடுக்கு (Mouse Click) ஒரு மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு பிடி சோற்றை கொடுக்கிறது என்றால் செய்வீர்களா?




இந்த 2 வெப்சைட்டுக்கும் சென்று பாருங்கள்.

நீங்கள் செய்யும் கிளிக் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, அங்கு வரும் விளம்பரங்கள் உங்கள் சார்பாக உணவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

உடனே, ஒரு கேள்வி வரும், இது உண்மையா? எப்படி நம்புவது? இது போல 100 மெயில் வருகிறது! எல்லாம் பொய்!! என நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன், ஆராய்ந்து பார்த்ததில் சில விஷயம் தெரிந்தது.


இது ஒரு ஐநா சபையின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.

இங்கு அறிவு சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே உதவலாம் - ஆங்கில மொழிஅறிவு சார்ந்த கேள்விகள் default option ஆக இருக்கிறது

விருப்பத்திற்கு ஏற்ப கணிதம், புவியியல், வேதியியல் என பல துறைகளை தேர்ந்து எடுத்து விளையாடி கொண்டே உதவலாம்

எவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவு உணவு கொடுக்க முடியும்

FAQ பகுதியில் தெளிவான விளக்கமும், செயல்படும் விதமும் கொடுத்து இருக்கிறார்கள்

முடிந்தால் பண, பொருள் உதவியும் செய்யலாம்

உண்மையானது தானா?: New York Times Magazine, USA Today, CBS Evening News, BBC News, Washington Post போன்ற நாளிதழ்களில் இந்த தளத்தை பற்றி நல்ல தகவல்கள் வந்துள்ளது.


இது இந்திய இளைஞர்களின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.

இதில் உதவ ஒரு எல்லை வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சொடுக்கு மட்டுமே அனுமதி ( IP Address - வைத்து கணக்கிடுகிறார்கள்)

நீங்கள் அலுவலகத்திலும், வீட்டுலும் கிளிக் செய்து 2 முறை உதவலாம்.

FAQ மூலமும், வீடியோ மூலமும் எப்படி செயல்படுகிறார்கள் என விளக்கி இருக்கிறார்கள்

பண, பொருள் உதவியும் செய்யலாம்

உண்மையானது தானா?: Times of India வில் 2006 ல் "Hello, conscience?"என ஒரு கட்டுரை இவர்களை பற்றி வந்துள்ளது.



நண்பர்களே! ஒரு கிளிக் செய்து விட்டு போவதுடன் முடித்து கொள்ளாதீர்கள். வலைதளம் என்னும் ஒரு அரிய ஆயுதம் நமது கையில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோம்.

என் இந்த பதிவின் மூலம் ஒரு 100 பேருக்கு தெரியும் இந்த விஷயம் உங்கள் வலைதளம் மூலம் ஆயிரம் பேருக்கு சென்றடைய முடியும்.

அனைத்து மக்களும் நல்லவர்களே! உதவ மனம் உள்ளவர்களே! அவர்களின் சூழலும் பொருளாதார வசதியும் அவர்களை தடுக்கிறது. அவர்கள் எல்லாம் இது போல ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், இதை பரவச்செய்வது.

நூறு மெயில்களையும் ஆயிரம் மொக்கைகளையும் பதிவிடும் நாம், நம் தேசிய அவமானத்தை கலைக்க ஒரு பதிவு வெளியிடும் உணர்வு கொண்டிருக்கிறோமா?


தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
  
இனி அது உங்கள் கைகளில்.....

இலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட்களை உங்கள் பிளாக்கில் வைக்க இங்கு செல்லவும்