“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்”
ஏ பாரதியே!
நீ சொல்லிவிட்டு போய்விட்டாய்!
இங்கு வந்து பார்
செத்து மடியும் எம்மக்களை!
என் செய்வோம் யாம்
எதற்கும் உதவா மானிட பதர்கள் நாங்கள்!!பசி - இந்த ஒரு வார்த்தையை மனதில் இருந்து உச்சரித்து பாருங்கள்,
என்ன காட்சி உங்கள் கண்முன் விரிகிறது?
பாலுக்காக அழும் குழந்தை,
பாலில்லாமல் தவிக்கும் தாய்,
எலும்பாய் தெரியும் ஏழை நாட்டு குழந்தைகள்,
எலிக்கறி சாப்பிடும் விவசாயி,
கஞ்சித்தொட்டியில் காத்திருக்கும் நெசவாளி.
வாழ்க்கையின் பாதையில் இப்படி பல சம்பவங்களை அனுபவித்திருக்கலாம், குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கலாம்.
ஐநா சபையின் கணக்குபடி 10 நொடிகளுக்கு (Seconds) ஒரு குழந்தை பசியால் இறக்கிறது.
யார் காரணம்? “விதி” என ஒரு வார்த்தை சொல்லி ஒதுங்கி போக முடியாது.
அரசாங்கமா? இயற்கையா? எதிரி நாடா? கடவுளா? யாரை குறை கூறி தப்பிக்கலாம்.
ஒரே ஒரு முறை உங்களை ஒரு கேள்வி கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும் நான் மற்றவர்கள் பசி போக்க என்ன செய்தேன்?
அனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருகிறேன், உதவுகிறன் என்று சொல்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
செல்ல நேரம் இல்லை, பணவசதி இல்லை, ஆனால் தினமும் உதவ மனம் உண்டு என விரும்புபவர்களுக்கு நான் வழிகாட்ட நினைக்கிறேன். உங்கள் ஒரு சொடுக்கு (Mouse Click) ஒரு மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு பிடி சோற்றை கொடுக்கிறது என்றால் செய்வீர்களா?
இந்த 2 வெப்சைட்டுக்கும் சென்று பாருங்கள்.
நீங்கள் செய்யும் கிளிக் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, அங்கு வரும் விளம்பரங்கள் உங்கள் சார்பாக உணவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
உடனே, ஒரு கேள்வி வரும், இது உண்மையா? எப்படி நம்புவது? இது போல 100 மெயில் வருகிறது! எல்லாம் பொய்!! என நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன், ஆராய்ந்து பார்த்ததில் சில விஷயம் தெரிந்தது.
1) Freerice.com
இது ஒரு ஐநா சபையின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.
இங்கு அறிவு சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே உதவலாம் - ஆங்கில மொழிஅறிவு சார்ந்த கேள்விகள் default option ஆக இருக்கிறது
விருப்பத்திற்கு ஏற்ப கணிதம், புவியியல், வேதியியல் என பல துறைகளை தேர்ந்து எடுத்து விளையாடி கொண்டே உதவலாம்
எவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவு உணவு கொடுக்க முடியும்
FAQ பகுதியில் தெளிவான விளக்கமும், செயல்படும் விதமும் கொடுத்து இருக்கிறார்கள்
முடிந்தால் பண, பொருள் உதவியும் செய்யலாம்
உண்மையானது தானா?: New York Times Magazine, USA Today, CBS Evening News, BBC News, Washington Post போன்ற நாளிதழ்களில் இந்த தளத்தை பற்றி நல்ல தகவல்கள் வந்துள்ளது.
2) Bhookh.com
இது இந்திய இளைஞர்களின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.
இதில் உதவ ஒரு எல்லை வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சொடுக்கு மட்டுமே அனுமதி ( IP Address - வைத்து கணக்கிடுகிறார்கள்)
நீங்கள் அலுவலகத்திலும், வீட்டுலும் கிளிக் செய்து 2 முறை உதவலாம்.
FAQ மூலமும், வீடியோ மூலமும் எப்படி செயல்படுகிறார்கள் என விளக்கி இருக்கிறார்கள்
பண, பொருள் உதவியும் செய்யலாம்
உண்மையானது தானா?: Times of India வில் 2006 ல் "Hello, conscience?"என ஒரு கட்டுரை இவர்களை பற்றி வந்துள்ளது.
நண்பர்களே! ஒரு கிளிக் செய்து விட்டு போவதுடன் முடித்து கொள்ளாதீர்கள். வலைதளம் என்னும் ஒரு அரிய ஆயுதம் நமது கையில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோம்.
என் இந்த பதிவின் மூலம் ஒரு 100 பேருக்கு தெரியும் இந்த விஷயம் உங்கள் வலைதளம் மூலம் ஆயிரம் பேருக்கு சென்றடைய முடியும்.
அனைத்து மக்களும் நல்லவர்களே! உதவ மனம் உள்ளவர்களே! அவர்களின் சூழலும் பொருளாதார வசதியும் அவர்களை தடுக்கிறது. அவர்கள் எல்லாம் இது போல ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், இதை பரவச்செய்வது.
நூறு மெயில்களையும் ஆயிரம் மொக்கைகளையும் பதிவிடும் நாம், நம் தேசிய அவமானத்தை கலைக்க ஒரு பதிவு வெளியிடும் உணர்வு கொண்டிருக்கிறோமா?
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
இனி அது உங்கள் கைகளில்.....