Cricket Countdown....

Friday, December 10, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

“நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்....

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் “என் வானிலே.. ஒரே வெண்ணிலா” - மனதை மயக்கும் பாடல்

“நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...”

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

“நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...”

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம...”

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
“ஒரு தெய்வம் தந்த பூவே” இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

“எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!...”

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் “சின்னத்தாயவள் தந்த” பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் “சிங்கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்...

“செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா”

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

“இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே”

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 “புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்”

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


Tuesday, December 7, 2010

வலைச்சர அனுபவம்....

ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.  நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.

சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய்  நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....

பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....

சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் -  கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!